2013ஆம் ஆண்டு சென்னை ஆர்.ஏ. புரத்தில் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என சென்னை நீதிமன்றம் தீர்ப்பு. தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி நரம்பியல் மருத்துவரான சுப்பையா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் 10 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பத்துப் பேரில் ஐயப்பன் என்பவர் அப்ரூவரானார். இந்த வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அல்லி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட பொன்னுச்சாமி, மேரி புஷ்பம், வில்லியம்ஸ், ஏசு ராஜன், போரிஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், செல்வ பிரகாஷ், முருகன், பேசில் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பிரபல நரம்பியல் மருத்துவராக இருந்து வெட்டிக் கொல்லப்பட்ட சுப்பையாவின் பூர்விகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமித்தோப்பு.
இவருடைய தாய்மாமனான பெருமாள், தனது சொத்துகள் அனைத்தையும் சுப்பையாவின் தாயார் அன்னக்கிளிக்கு எழுதி வைத்தார். ஆனால், அந்தச் சொத்தில் பெருமாளின் இரண்டாவது மனைவியான அன்னபழம் அதில் பங்கு கேட்டார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.
சக மனிதன் மீதான வெறுப்பு, அதிகரிக்கும் குற்றங்கள்
பாலியல் வன்முறை செய்ய வந்தவரை கொலை செய்த பெண் விடுவிக்கப்பட்டாரா? உண்மை என்ன?
இதில் அன்னபழத்திற்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அந்தத் தீர்ப்பை எதிர்த்து அன்னக்கிளி ஒரு வழக்கைத் தொடர்ந்தார். இந்த நிலையில், இரு தரப்பும் சமாதானம் செய்து கொள்கின்றனர். அதன்படி அஞ்சுகிராமத்தில் உள்ள இரண்டேகால் ஏக்கர் நிலம் அன்னக்கிளிக்குக் கிடைக்கிறது.
சில வருடங்கள் கழித்து அன்னபழத்தின் மகனான பொன்னுசாமி, தன் தாய் செய்துகொண்ட உடன்படிக்கை செல்லாது என அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று தள்ளுபடியானது.
இருந்தபோதும் அஞ்சுகிராமத்தில் உள்ள நிலத்தை தன் மனைவியில் பெயரில் எழுதிக் கொடுத்ததோடு, அதன் மீது யாரும் உரிமை கொண்டாடாம் இருக்க கீழ் நீதிமன்றத்தில் தடையாணை பெறுகிறார் சுப்பையா. மேலும் பொன்னுச்சாமி மீது காவல்துறையிலும் புகார் அளித்தார் சுப்பையா.
இந்த நிலையில்தான் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் தான் பணியாற்றி வந்த மருத்துவமனையிலிருந்து சுப்பையா வெளியில் வரும்போது சிலரால் வெட்டப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்பையா செப்டம்பர் 23ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் பொன்னுச்சாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் நண்பர்களான வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசு ராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஐய்யப்பன் அப்ரூவரானார்.
இந்த வழக்கில் 2015ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. 2017ல் சாட்சிகள் விசாரணையுடன் வழக்கு துவங்கியது. ஆனால், பெரிதாக வேகமெடுக்கவில்லை.
இதையடுத்து சுப்பையாவின் மைத்துனரான மோகன் வழக்கை சீக்கிரம் விசாரித்து முடிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தை நாடினார். கடந்த மே 31ஆம் தேதி வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு, இந்த் வழக்கை ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு உத்தரவிட்டது.
அதன்படி தமிழ்நாட்டை உலுக்கிய இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது