தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தி சேகரிக்கவும் ஒரு குற்றச் சம்பவம் குறித்து விசாரித்து வரவும் சென்றிருந்தோம். செய்தி தொடர்பாக அலைந்து திரிந்து மதிய வேளையில் உணவு உட்கொள்ளாத காரணத்தால் வயிற்று பசி. தென்காசியில் இருந்து புளியங்குடி நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் மிகப்பிரபலமான ஒரு உணவகம் நியாஸ் ஹோட்டல் என்ற பெயரில் இயங்கி வருவதாக தகவல் கிடைத்தது. அதனால் பசியாற்ற அந்த உணவகத்திற்கு சென்ற நமக்கு அங்கிருந்த நிலமை மிகவும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது. மிகவும் பிரபலமான உணவகம் என அப்பகுதியினர் கூறியதை கேட்டு சென்ற நமக்கு உள்ளே சென்றதும் மிக பெரிய வரவேற்பும் தோரணைகள் அலங்கரிக்கப்பட்ட விதமும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், உணவு ஆர்டர் செய்துவிட்டு சாப்பிட அமர்ந்த நமக்கு அங்கு நடந்த சம்பவங்கள் நம்மை பெரிதும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது என்றால் அங்கே அப்படி என்ன உள்ளது.
சற்று விரிவாக காணலாம்.
தென் மாவட்டங்கள் என்றாலே உணவுகளுக்கு பஞ்சம் இருக்காது என்றும், அந்த உணவுகள் வேறு மாவட்டங்களில் கிடைக்க கூடிய உணவை விட மிக சுவையாக நாவின் நரம்புகளை சிலிர்க்க வைக்கும் என்பதும் மற்ற மாநில மற்றும் மாவட்டத்தினரின் நம்பிக்கை. ஆனால் தென்மாவட்டத்தில் வசித்து வரும் நமக்கே நம் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தி உள்ளது சற்று அவமானம் தான். உணவகம் என்றால் சாப்பிட வருபவர்கள் முதலில் கவனிப்பது அந்த இடத்தில் சுத்தத்தையும் சூழ்நிலையும் மட்டும்தான் அதன் பிறகு தான் அந்த இடத்தின் சுவை குறித்து சிந்தனைக்கு வரும். ஆனால் சாப்பிட சென்ற நம்முடன் கரப்பான் பூச்சி கபடி விளையாடும் என்று நாம் இதுவரை கேட்டதுமில்லை கண்டதும் இல்லை. அப்படி இருக்க இந்த உணவகத்தில் என்னதான் நடக்கிறது என்று விசாரித்தபோது நமக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. உணவகத்தில் உள்ளே சென்றதும் ஆர்டர் எடுக்க வந்த கடை ஊழியரிடம் உணவு ஆர்டர் செய்தோம். சிறிது நேரத்தில் வாழை இலையில் ஆவலை தூண்டும் வகையிலும் பளபளப்பாகவும் கொண்டு வரப்பட்டா அந்த உணவை ருசிக்க சென்ற நமக்கு கரப்பான் பூச்சி ஒன்று மடியில் வந்து விழுந்தது முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. சுற்றி முற்றி பார்க்கையில் பல இடங்களில் இது போன்று எண்ணற்ற கரப்பான் பூச்சிகள் அங்கும் இங்கும் ஓடி தெரிந்தன. அச்சத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து அந்த உணவக ஊழியரிடம் நாம் உரையாடிய போது அவர் கூறிய தகவல்கள் நம்மை சற்று அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஊழியர் கூறிய விவரம் என்னவென்றால் இந்த உணவகம் மிகப்பிரபலமான கடை என்பதாலும் அதிக விற்பனை நடக்கும் கடை என்பதாலும் கடையநல்லூர் நகராட்சியில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கையூட்டு வாங்கிக் கொண்டு கடையின் சுகாதாரம் குறித்தும் தரம் குறித்தும் முறையான ஆய்வில் ஈடுபட மறுக்கின்றனர் என்று கூறினார். உணவகத்தில் பார்க்க பளபளப்பாக இருக்க கலப்பட எண்ணைகள் பல பயன்படுத்தப்படுவதாகவும் நிறம் மற்றும் சுவைக்காக மனித உடலுக்கு ஊறு விளைவிக்ககூடிய சுவையூட்டிகள் மற்றும் நிறமிகள் அதிக அளவில் பயன்படுத்துவதாக அவர் கூறிய பின்னர் அங்கிருந்த உணவை உட்கொள்ள மிக பெரும் அச்சம் ஏற்பட்டது. பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களை கண்டுகொண்டு களை எடுத்து, இவ்வாறான சமூக விரோத செயல்களை லஞ்சம் வாங்கிக் கொண்டு செய்ய அனுமதித்து காசுக்கு விசுவாசம் காட்டும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை களை எடுத்தால் மட்டுமே இது போன்ற செயல் களில் ஈடுபடும் உணவக உரிமையாளர்கள் தங்கள் பணிகளை சுத்தமாகவும் வாடிக்கையாளர்களிடம் வாங்கும் பணத்திற்கு தரமான உணவுகளை கொடுக்க முன்வருவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கிம்பளம் வாங்கி கொண்டு இது போன்ற கடைகளுக்கு அனுமதித்து வரும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை சற்று பொருத்திருந்து பார்க்கலாம்.