தூத்துக்குடி ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 37), தூத்துக்குடி 45-வது வட்ட திமுக செயலாளர். இதுதவிர, தூத்துக்குடி ராமசாமிபுரத்தில் இவருக்கு சொந்தமாக ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், தூத்துக்குடி சண்முகப்புரத்திலுள்ள முனியசாமி கோவில் கொடை விழாவில் சிலர் மதுபோதையில் நடனமாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக வந்த நடராஜன் அதை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நபர்கள் நடராஜனை பின்தொடர்ந்து வந்து ராமசாமிபுரத்திலுள்ள அவரது அலுவலகம் முன்பு வைத்து தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியே பெரும் பரபரப்பானது.
உடனே, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, கொலை நடந்த இடத்தில் நடராஜன் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதில் 4 பேர் கொண்ட கும்பல் நடராஜனை பின்தொடர்ந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை கல்லால் தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்தி கொலைசெய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கொலை தொடர்பாக சண்முகபுரத்தை சேர்ந்த அருண்குமார், அஜித்குமார் ஆகியோரை கைது செய்தனர். சம்பவத்தையடுத்து தலைமறைவான மாரிமுத்து, அந்தோணிசாமி ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அருண்குமார் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.