மதுரையில் தேசிய கைத்தறி தினத்தில் சேமித்து வைத்த பணத்தில் கூலி தொழிலாளர்களுக்கு கைத்தறி ஆடைகளை இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமி
நாடு முழுவதிலும் இன்று தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதரத்திற்கு பொதுமக்கள் உதவுவதை ஊக்குவிக்கும் வகையில் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த 4ஆம் வகுப்பு மாணவியான உஷா ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு பெற்ற பரிசுத்தொகையான ஆயிரம் ரூபாயையும், தான் சேமித்து வைத்திருந்த 500ரூபாய் என ஆயிரத்தி ஐநூறு ரூபாயை பயன்படுத்தி மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்களை நேரில் சந்தித்து கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட துண்டுகளை மற்றும் முக கவசங்களை வாங்கியுள்ளார்.
இதனை இன்று காலையில் செல்லூர், நரிமேடு, கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கைத்தறி துண்டுகளையும், முக கவசத்தையும் நேரில் சென்று இலவசமாக வழங்கினார்.
தொடர்ந்து கைத்தறி துணிகளை பொதுமக்களிடம் வழங்கியபோது அனைவரும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதரத்திற்கு உதவிடும் வகையில் கைத்தறி ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய கைத்தறி தினத்தன்று கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் சிறுமி மேற்கொண்ட முயற்சியை நெசவாளர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.