கர்நாடக முதல்வர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவிற்கு, கேபினட் அந்தஸ்துக்கான சலுகைகள் வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருந்த நிலையில் அவ்வாறான சலுகைகள் வேண்டாம் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வராக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த பின்னர் வயது மூப்பின் காரணமாக தனது முதலமைச்சர் பதவியை கடந்த ஜூலை 27ம் தேதி ராஜினாமா செய்தார் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா.
எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளராக விளங்கும் பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் புதிய முதல்வராக தேர்வானார். தொடர்ந்து புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்றிருக்கிறது.
இந்நிலையில் எம்.எல்.ஏ என்ற பதவியில் மட்டுமே எடியூரப்பா இருப்பதால் அமைச்சர்களுக்கான அரசு பங்களாவை எடியூரப்பா காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து புதிதாக முதல்வராகியிருக்கும் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு அமைச்சருக்கான சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதன் மூலம் அமைச்சர் போன்றே அரசு சார்பில் கார், அதற்கான ஓட்டுனர், அரசு பங்களா உள்ளிட்ட அத்தனை சலுகைகளும் எடியூரப்பாவிற்கு கிடைக்கும். மேலும் பசவராஜ் பொம்மை முதல்வராக இருக்கும் வரையில் இந்த சலுகைகளை எடியூரப்பா அனுபவிக்கலாம் எனவும் கூறப்பட்டது.
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை முதல் முறை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் வேறு யாருக்குமே இப்படி ஒரு சலுகை கர்நாடகாவில் வழங்கப்பட்டதில்லை.
இந்த நிலையில் கர்நாடக அரசு அறிவித்த அமைசருக்கான சலுகைகள் எதுவும் எனக்கு வேண்டாம் என எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். அதில் அரசின் உத்தரவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததை தொடர்ந்து குமரகிருபா சாலையில் உள்ள காவேரி இல்லத்தை (அரசு பங்களா) எடியூரப்பா அடுத்த 6 மாதத்திற்குள் காலி செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த காவேரி இல்லத்தை எடியூரப்பா காலி செய்வதை தவிர்பதற்காகவே அவருக்கு அமைசருக்கான அந்தஸ்து வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருந்ததாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.