புதுடில்லி: ‘‛பிளாஸ்டிக்கில் தேசியக்கொடிகள் தயாரிப்பதை தடுக்க வேண்டும்” என, மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நாட்டு மக்களின் நம்பிக்கை, மகிழ்ச்சி, கவுரவம் ஆகியவற்றின் பிரதிநிதியாக தேசியக்கொடி விளங்குகிறது. அதனால் தேசியக்கொடி மீது மக்கள் அன்பும், மரியாதையும் வைத்து உள்ளனர்.சுதந்திரம் மற்றும் குடியரசு தின நாட்களில் தேசியக்கொடியை தங்கள் சட்டையில் அணிந்து செல்வது, மக்களின் வழக்கமாக உள்ளது.
தேசிய, கலாசார, விளையாட்டு நிகழ்ச்சிகளில் காகிதத்தால் செய்யப்படும் தேசியக் கொடிகளை விட, பிளாஸ்டிக்கால் செய்யப்படும் தேசிய கொடிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கு காலதாமதமாகும்; நீர் வளத்தையும் பாதிக்கும். அதனால் பிளாஸ்டிக்கால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்படுவதை தடுக்க வேண்டும். காகிதங்களால் தேசியக்கொடிகளை தயாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.