அமெரிக்கா கைவிரித்துவிட்ட நிலையில் தலிபான்களை ஒடுக்க இந்தியா உதவ வேண்டும் என ஆப்கானிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலிபான்களின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இந்திய விமானப் படையை அனுப்பி வைக்குமாறு ஆப்கானிஸ்தான் அரசு, இந்தியாவிடம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் உள்நாட்டு போரானது தற்போது அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தால் மீண்டும் மோசமான நிலையை எட்டியிருக்கிறது. அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுவதுமாக வெளியேறிவிடும். இந்த நிலையை சாதகமாக பயன்படுத்தி, ஆப்கன் அரசுப் படைகளுக்கு எதிரான சண்டையை தலிபான்கள் கடந்த சில தினங்களாக தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் எதிரொலியாக கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டும் 8 மாகாண தலைநகரங்களை கைப்பற்றி தலிபான்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர்.
நேற்று (ஆக. 10) ஒரே நாளில் மட்டும் இரண்டு மாகாண தலைநகரங்கள் என இதுவரையில் மொத்தமுள்ள 34 மாகாண தலைநகரங்களில் 8-ஐ தலிபான்கள் கைப்பற்றி வேகமாக முன்னேறி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா கைவிரித்துவிட்ட நிலையில் தலிபான்களை ஒடுக்க இந்தியா உதவ வேண்டும் என ஆப்கானிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இந்திய விமானப் படையின் (IAF) உதவியை ஆப்கானிஸ்தான் எதிர்பார்ப்பதாக தெரியவந்துள்ளது. ஆப்கன் வெளியுறவுத்துறை அமைசச்ர் ஹனீப் ஆத்மர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இடையிலான தொலைபேசி உரையாடலின் போது இந்த கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இனிமேல் ஆப்கனுக்கு தங்களால் உதவ முடியாது என அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஆப்கானிஸ்தானில் சமீப நாட்களில் தலிபான் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. தலைநகர் காபுல், Mazar-i-Sharif போன்ற முக்கிய நகரங்களை தலிபான்கள் நெருங்கி வருவது அஷ்ரஃப் கனி தலைமையிலான ஆப்கன் அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கத்தார் தலைநகர் தோஹாவில் ஆப்கன் அரசு தரப்புக்கும், தலிபான்களுக்கும் இடையே போர் நிறுத்தம் அமல்படுத்துவது குறித்த அமைதி பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.