தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு!
எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்க சபாநாயகர் அறிவுறுத்திய நிலையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது அதிமுக. அக்கட்சியின் எம்.எல்.ஏக்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக பட்ஜெட் தாக்கல் கலைவாணர் அரங்கத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டசபையில் கடந்த 2018ஆம் ஆண்டில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை காகிதவடிவில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் மைக் கொடுக்க சொல்லி கோஷமிட்டனர், கோஷமிட்டவர்களை இருக்கையில் அமர சொல்லி சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்திய நிலையில், பத்துக்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து மைக் கொடுக்க சொல்லி கோஷமிட்டனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்க சபாநாயகர் அறிவுறுத்தினார். நிதியமைச்சர் பேச ஆரம்பித்தபோது எதிர்க்கட்சித் தலைவரும் எழுந்து பேச தொடங்க பேரவைத் தலைவர் வாய்ப்பு வழங்கவில்லை..
இருப்பினும் தன் கையில் வைத்திருந்த குறிப்பை தொடர்ந்து வாசித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளி நடப்பு செய்வதாக அறிவித்து அதிமுகவினர் அனைவரும் வெளியேறினர்..
முன்னதாக முதல் முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதால் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்