தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக இன்று (ஆக.,13) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பல்வேறு துறைகளுக்கும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பெட்ரோல் மீதான வரி குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்
திமுக எம்.பி., கனிமொழி
தொழில்துறை அலகுகளுக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், அறைகலன்கள் சர்வதேச பூங்கா, புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிய திட்டங்களை தூத்துக்குடி மக்களின் நலனுக்காக அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தூத்துக்குடி மக்களின் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றி. தமிழக சுற்றுச் சூழலை மேம்படுத்த ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள இயக்கம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது. வளர்ச்சியோடு சூழலியல் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் முதல்வருக்கு நன்றி.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
எதிர்பார்த்தைபோல் தமிழக பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டம் இல்லை.ஆட்சிக்கு வருவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மறந்து போன பட்ஜெட்.
அதிமுக
பெட்ரோல் விலை குறைப்பு – ஏமாற்றம். திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையை ரூ.4 குறைக்கப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
திமுக ஆட்சியின்போது வைத்துள்ள கடனுக்கு அதிமுக.,வில் தான் அடைத்தோம். தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சம் கோடி என்பது 2022ல் எதிர்பார்க்கப்படும் கடன் தான், அதிமுக ஆட்சியின் முடிவில் 4.5 லட்சம் கோடி தான். அதிமுக ஆட்சியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6000 கொடுத்துள்ளோம், பொங்கலுக்கு ரூ.2000 வழங்கினோம். வாக்குறுதிகளாக சொல்லாததை கூட செய்தோம். திமுக எல்லா வாக்குறுதிகளையும் தள்ளிப்போடுகிறது. இந்த பட்ஜெட் டிஜிட்டல் டிமிக்கி என்று தான் சொல்ல முடியும். அனைத்திற்கும் ஆராயப்படும், தெரிவிக்கப்படும் என்றே நிதியமைச்சர் கூறுகிறார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்
தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
தியாகராஜனுக்கு நிதித்துறையுடன் தமிழ் துறையையும் சேர்த்து வழங்குங்கள். செந்தமிழ் நன்கு ‘வறளும்’. கொடுத்த வாக்குறுதிகளில் ஓரிரண்டை கூட நிறைவேற்ற வக்கில்லை. விடியல் யாருக்கு? நிதி பற்றாக்குறையால் மாநில அரசு திண்டாட்டம், எனினும், ரூ 5,000 கோடி ஒதுக்கீடு அணைகளை மேம்படுத்தவா? அணியை மேம்படுத்தவா? வெள்ளை அறிக்கை புராணம் பாதி, சா(நீ)திக்கட்சி புராணம் மீதி. இதற்கு ஏன் ‘பட்ஜெட்’ எனும் பில்டப்?.
ஜி.கே.வாசன், த.மா.கா.,
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத பற்றாக்குறை நிறைந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
முத்தரசன், இந்திய கம்யூ.,
தமிழகம் தலைநிமிர்ந்து நடைபோட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்
மதிமுக பொதுச்செயலர் வைகோ
பொற்கால ஆட்சிக்கான திறவுகோளாக பட்ஜெட் அமைந்துள்ளது
இவ்வாறாக அவர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.