தமிழக முதல்வர் ஸ்டாலின் புத்திசாலியான அரசியல்வாதி. அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல நீர், நிலம், மொழி விஷயத்தில் அரசியல் செய்ய கூடாது,” என கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா அறிக்கை:மேகதாது விஷயத்தில் ஆளுங்கட்சியான பா.ஜ., இரட்டை வேடம் போடுகிறது.ஒரு பக்கம் தமிழக பா.ஜ., எதிர்ப்பு தெரிவிக்கிறது; மறு பக்கம், கர்நாடகாவை சேர்ந்த பா.ஜ., தேசிய பொது செயலர் ரவி ஆதரவு தெரிவிக்கிறார்.மேகதாது விஷயத்தில் மாநில நலன் கருதி முதல்வர் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம். ஆனால் இரட்டை நாக்கால் பேசுவதை சும்மா பார்த்து கொண்டிருக்க முடியாது.மத்திய அரசு கண்ணாமூச்சி ஆட்டத்தை கைவிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழையின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்துக்கு விட வேண்டிய தண்ணீர் முறையாக செல்கிறது.அணை கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் புத்திசாலியான அரசியல்வாதி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல, நீர், நிலம், மொழி விஷயத்தில் அவர் அரசியல் செய்ய கூடாது.
அண்டை மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும். குடிநீருக்காக செயல்படுத்தும் திட்டத்தில், கன்னடர்கள் மட்டுமின்றி தமிழர்களும் உள்ளனர். இத்தகைய குடிநீர் திட்டத்துக்கு தமிழக அரசு அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.மேகதாது திட்டத்துக்கு தமிழகம், விடாப்பிடியாக எதிர்ப்பு தெரிவித்தால், அரசியல் சண்டை ஏற்படும் சூழல் உருவாகும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.