சார்பட்டா பரம்பரையில் நாங்கள் குறிப்பிட்டிருக்கக்கூடிய காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கை பாயும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
திமுகவிடம் பணம் வாங்கிவிட்டு உள்நோக்கத்தோடு அக்கட்சிக்கான பிரச்சாரப்படமாக சார்பட்டா பரம்பரை படம் இருக்கிறது எனவும், எனவே அப்படத்தின் காட்சிகளை நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் அண்மையில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு எதிராக அ.தி.மு.க சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சார்பட்டா படத்தை பொருத்தவரை வரலாற்றை மாற்றி, மறைத்து உண்மைக்கு மாறான விஷயத்தை உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்டது என்பது படத்தை பார்த்ததும் உணரப்படுவதாக தெரிவித்தார். சென்னையில் குத்துச்சண்டைக்கும் அரசியலுக்கு தொடர்பு இல்லை. திமுக தான் குத்துச்சண்டையை ஆதரித்ததாக படம் எடுக்கப்பட்டுள்ளது ஏற்கத்தக்கது அல்ல என ஜெயக்குமார் விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் திரைப்படத்திலும், அரசியலிலும் உண்மையான கதாநாயகன் எம்.ஜி.ஆர். அப்படியான ஒருவரை குத்துச்சண்டைக்கு தொடர்பு இல்லை என சித்தரிப்பது சரியில்லை என கூறிய அவர், இந்த படம் மூலம் அரசியலை புகுத்தி ஆதாயம் தேட சதி செய்துள்ளனர்.
முதல் கையெழுத்து மூலம் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். சாராயத்தை கொண்டு வந்து குடிக்க கற்றுக் கொடுத்தது திமுக தான். படத்தில் திமுகவினரை உத்தமர்கள் போல காட்டியுள்ளனர். 1970ல் மதுக்கடையை திறக்க வேண்டாம் என ராஜாஜி , கருணாநிதியின் கையை பிடித்து கெஞ்சினார். சார்பட்டா பரம்பரை திமுகவின் பிரசார படம் . ஸ்டாலினை முன்னிறுத்த முயற்சிக்கும் படம். மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்த உண்மை கதை எல்லோருக்கும் தெரியும்.
வளரும் இளைஞர்கள் மத்தியில் திமுக தான் விளையாட்டை ஊக்குவிப்பதாக காட்டியுள்ளனர். வளர்ந்து வரும் இயக்குநர்களை மதிக்கிறோம். ஊக்கப்படுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் கண்டனம் தெரிவித்த பிறகும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கவில்லை. நாங்கள் குறிப்பிட்டிருக்கக்கூடிய காட்சிகளை நீக்க வேண்டும்; இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கட்சி முடிவு செய்யும் என கூறினார்.