தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட திருச்சபை சேகர பெருமண்டல உறுப்பினர் மற்றும் திருச்சபை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலையொட்டி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டம் பண்ணைவிளை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் குறித்து திருச்சபை குரு சுந்தர்சிங் ஐசக் ராஜா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்
மொத்தம் 750 வாக்காளர்களைக் கொண்ட பண்ணைவிளை திருச்சபையில் காலை முதல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. தற்போதைய நிலவரப்படி 450 வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர். உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி மாலை வரை நடைபெறும். மாலை ஐந்து முப்பது மணிக்கு மேல் விடுபட்ட வாக்காளர்களுக்கு அரைமணிநேரம் வாக்களிப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு முடிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தற்போதுவரை நாசரேத் திருமண்டலதிற்கு உட்பட்ட திருச்சபைகளில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. இதற்கு காவல் துறையும் தகுந்த ஒத்துழைப்பை அளித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து நடத்தப்படுகின்றது. வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதிலும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் முகக்கவசத்தை தவறும் பட்சத்தில் அவர்களுக்கு திருச்சபையில் இலவசமாக முகக்கவசம் வழங்கவும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்றார்.