பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதால் இரண்டு கோடி பேர் நேரடியாக பயன் பெற்று வருகின்றனர்.
டிராக்டர் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நேரடியாக டீசல் மானியம் சென்றடையக் கூடிய வகையில் ஆய்வு பணி நடைபெற்று வருகிறது என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் கூறியுள்ளார்.
பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு டீசல் விலையை குறைக்கவில்லை ஆகவே டீசல் விலையை குறைக்க வேண்டும் இதனால் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேரவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் கடந்த 15 ஆண்டுகளில் மூன்று முறை அதிமுக ஆட்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்ட தாகவும், ஆனால் திமுக 4 முறை பெட்ரோல் டீசல் விலையை குறைத்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் தற்போது அரசின் திட்டங்கள் அதற்கு உரியவர்களுக்கு பயன்படும் வகையில் நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவே பல்வேறு ஆய்வுகள் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
டீசலை பயன்படுத்துவோரின் வாகனங்கள், 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலானவை இவை டீசலை பயன்படுத்தி வரும் நிலையில் டீசல் விலையை குறைப்பது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் டீசல் அதிகம் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து துறைக்கு மானியம் கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மீனவர்களுக்கும் கூடுதலாக டீசல் மானியம் வழங்க முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றை யார் யார் பயன்படுத்துகிறார்கள் அவர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட தகவல் எதுவும் அரசிடம் இல்லை. விவசாய பணிகளுக்கு டிராக்டர் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நேரடியாக டீசல் மானியம் சென்றடையக் கூடிய வகையில் ஆய்வு செய்து வெளிப்படையாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாக கூறிய நிதியமைச்சர், தற்போது பெட்ரோலுக்கு 3 ரூபாய் விலை குறைக்கப்பட்ட நிலையில் அது குறித்து தினமும் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.