விமான விரிவாக்க பணிகளுக்காக, நிலம் கையகப்படுத்தப்படும் விவசாயிகளுடன் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ -வும்,பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவியுமான திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் கலந்துரையாடினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமதி வானதி சீனிவாசன், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சி கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும் அது முழுமை அடையாமல் இருக்கிறது. கோவை விமான நிலையம் விரிவாக்கம் என்பது மேற்கு தமிழக வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்று. ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியா அதற்கான திட்டத்தை வகுத்து கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தி தர வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு விரிவாக்கத் திட்டத்தை துவக்க முடியும். கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்துள்ள நிதி நிலை அறிக்கையில், கோவை விமானநிலையம் விரிவாக்கம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு சிலரது நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. அவர்களுக்கான இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இதில் முக்கியமாக, வாழ்நாள் முழுவதும் உழைத்து சேமித்து கட்டிய சிறு வீடுகள் உள்ள பகுதிக்கு கொடுக்கப்படும் இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாகவுள்ளது. அந்த தொகையை வைத்துக் கொண்டு அவர்கள் வேறு இடத்தில் வீடு வாங்கி குடியேறுவது மிகவும் சிரமம். இந்த சிறு வீடுகள் இருக்கும் பகுதி ஒரு சிறிய அளவு மட்டும் தான். எனவே அந்த வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல், தற்போது இருக்கும் விமான நிலையத்தின் தெற்குப் பகுதியில் உள்ள அதிக விவசாயம் செய்யாத நிலங்களை கையகப்படுத்தி விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில்,கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளுடன் என்றுமே இருந்துள்ளது. அவர்களுக்கான சட்ட போராட்டங்களிலும் உறுதுணையாக இருந்துள்ளது.
விமான நிலைய விரிவாக்கம் கண்டிப்பாக நடைபெறவேண்டும். ஆனால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு இருக்கக் கூடாது என்பதில் பாரதிய ஜனதா கட்சி உறுதியாக உள்ளது. இங்கு வரும் ஒவ்வொரு அதிகாரிகளும் ஒவ்வொரு விதமாக இந்த திட்டத்தை பற்றி விளக்கி,சில உறுதிமொழிகளை அளித்து செல்கிறார்கள். இதனால் மக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். இதைத் தவிர்க்க நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள அனைவரையும் ஒன்றாக வரவழைத்து, அவர்களுக்கு தகுந்த விளக்கத்தை ஒரே நேரத்தில் திட்டத்தை பற்றி விளக்கி அவர்களது சந்தேகத்தை போக்க வேண்டும்.
மேலும் சென்ற ஆட்சியில் முன்னாள் அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி அவர்களின் முயற்சியால் நிலம் கையகப்படுத்துவதற்கான தொகை உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தொகை உடனடியாக அவர்களுக்கு சென்றடைய வேண்டும். கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலங்களில் பல சிறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன அவர்களுக்கான இழப்பீட்டு தொகை எப்படி கணக்கிடப்படுகிறது என்பது குழப்பமாக உள்ளது.எனவே மாநில அரசு ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை உருவாக்கி உடனடியாக இப்பகுதி மக்களை அழைத்து பேசி விமான நிலைய விரிவாக்கத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.