தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா, மற்றும் விஜர்சன விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சுடலைமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி விழா, இந்துக்களால் கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய திருவிழாவாகும். இந்த திருவிழாவானது வருகின்ற செப்.10 (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ளது. அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பான முறையில் கொண்டாடிட இந்து மக்கள் கட்சி சார்பாகவும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, அதன் பின்பு 12ம் தேதி திரேஸ்புரத்தில் அமைந்துள்ள சங்குமுக விநாயகர் திருக்கோவில் அருகில் உள்ள கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட உத்தேசித்துள்ளோம்.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழக அரசு வகுத்துள்ள கோவிட் 19 தொற்று நடத்தை விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், கை சுத்திகரிப்பான், மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவைகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எங்கள் அமைப்பின் சார்பாக ஒருங்கிணைந்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே விநாயகர் விஜர்சன விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தகுந்த அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்றார்.