மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகாராஷ்டிர முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக மும்பையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் அனைவரும் சொந்த மாநில மக்களிடம் ஆசி பெறுவதற்காக மக்கள் ஆசி யாத்திரையை கட்சித் தலைமை அறிவுரையின் கீழ் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே, நேற்று மக்கள் ஆசி யாத்திரையில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதை முதல்வர் உத்தவ் தாக்கரே மறந்துவிட்டார். பக்கத்தில் இருப்பவரிடம் அந்த விவரத்தை கேட்டுப்பெறுகிறார், நான் மட்டும் அங்கிருந்தால் அவரை கன்னத்தில் அறைந்திருப்பேன் என்று பேசினார். இந்த கருத்து மகாராஷ்டிரா முழுவதும் சிவ சேனா தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை கண்டித்து அக்கட்சித் தொண்டர்கள் ஆங்காங்கே போராடி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது மாநிலம் முழுதும் பல காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புனே மற்றும் நாசிக்கில் உள்ள காவல்நிலையங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க அவர் முன் ஜாமீன் கோரி கோரினார். மேலும் மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டுமெனவும் கோரினார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மகாராஷ்டிர போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முதல் மத்திய அமைச்சராகியிருக்கிறார் அவர்.
நாராயண் ரானே கைது குறித்து நாசிக் காவல் தலைவர் தீபக் பாண்டே கூறுகையில், மத்திய அமைச்சர் நாராயண ரானே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் அடுத்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இருக்கும் என்றார். மேலும் நாராயண் ரானே மாநிலங்களவை எம்.பியாக இருப்பதால் அவருடைய கைது நடவடிக்கை குறித்து மாநிலங்களவை தலைவரான வெங்கய்ய நாயுடுவிடம் தெரிவிக்கப்படும் என்றார்.
நாராயண் ரானே கைது மூலம் மும்பை பரபரப்படைந்துள்ளது. மும்பையில் உள்ள அவரின் வீட்டு முன் பரபரப்பான சூழல் நிலவுகிறது.