தமிழக சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அத்துறை அமைச்சர் கே.என் நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அறிவிக்கப்படும். மேலும் காஞ்சிபுரம், கும்பகோணம்,கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனை சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல தமிழகத்தில் புதிதாக 29 நகராட்சிகள் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக இருக்கும் நகராட்சிகளின் பட்டியல்..
1. பள்ளப்பட்டி,
2. திட்டக்குடி,
3. மாங்காடு,
4. குன்றத்தூர்,
5. நந்திவரம்,
6. கூடுவாஞ்சேரி,
7. பொன்னேரி,
8. திருநின்றவூர்,
9.சோழிங்கர்
10. இடங்கனசாலை
11. தாரமங்கலம்
12. திருமுருகன் பூண்டி
13. கூடலூர்
14. காரமடை
15. கருமத்தம்பட்டி
16. மதுக்கரை
17. வடலூர்
18. கோட்டக்குப்பம்
19. திருக்கோவிலூர்
20. உளுந்தூர்பேட்டை
21. அதிராம்பட்டினம்
22. மானாமதுரை
23. சுரண்டை
24. களக்காடு
25. திருச்செந்தூர்
26. கொல்லன்கோடு
27. முசிறி
28. லால்குடி
29. புகளூர் மற்றும் tnpl புகளூர் பேரூராட்சிகள் இணைப்பு.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 121 நகராட்சிகள் உள்ள நிலையில் தற்போது 29 நகராட்சிகள் புதிய அறிவிப்பின் மூலம் 150 நகராட்சிகள் ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தரம் உயர்த்தப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்படுகிற ஊராட்சிகளில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவர்களது பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளிலேயே தொடர்வார்கள். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் முடிவடைகின்ற போது இணைக்கப்படும் பகுதிகள் புதிதாக உருவாக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் நகராட்சி அல்லது மாநகராட்சியின் முழுமையான ஆளுமைக்கு உட்படுத்தப்படும்.
இதேபோல், திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு பூவிருந்தவல்லி, மன்னார்குடி, ஆகிய நகராட்சிகளும் அவற்றை சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.