திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அறிவிக்கப்படாத பார்களில் மது விற்பனை கொடிக்கட்டி பறக்கிறது. இதனால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், என தமிழ்நாடு தேவர் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.
திண்டுக்கல்லில், தமிழ்நாடு தேவர் பேரவையின் மாநில துணைத் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கடந்த அ.தி.மு.க ஆட்சியிலும்,தற்போது திமுக ஆட்சியிலும் மது விற்பனை நடக்கிறது. தி.மு.க ஆட்சியிலும் அரசுக்கு புறம்பான முறையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடமும், காவல் துறையினரிடமும் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைை. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும், பள்ளிக்கூடங்களின் அருகிலும் மது பார்கள் செயல்படுவதால் இளைய சமுதாயம் தவறான பாதையில் செல்கிறது. தங்களது எதிர்காலத்தை பாழாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டவிரோதமாக பார் நடத்தக்கூடியவர்களிடம் கேட்டால் ஆளுங்கட்சி பெயரினை பயன்படுத்தி மிரட்டும் தொனியில் பேசுகிறார்கள்.எனவே ஒட்டன்சத்திரம் பகுதிகளில் செயல்படும் அறிவிக்கப்படாத பார்கள் அரசுக்கு புறம்பாக, சட்டவிரோதமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. பார்களை கண்டறிந்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையார் போன்ற மூன்று உட்பிரிவுகளை இணைத்து தேவர் என்ற ஒரு பிரிவிற்குள் கொண்டு வரவேண்டும். மேலும் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கொடுத்து கல்வியிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும்,மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் , ஒட்டன்சத்திரத்தில் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலையை அரசு நிறுவ வேண்டும். இதனை அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.