இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நலன் கருதி, நோய்த் தொற்றுப் பரவலை குறைக்க பின்வரும் கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் (5- 9- 2021 முதல்) அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது.
ஏற்கெனவே, அறிவித்தவாறு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுதலங்களிலும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் திருவிழாக்கள் நடத்துவதற்கான தடையும் தொடரும்.
கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய்ப் பரவலின் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.
மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே 1- 9- 2021 முதல் 9,10,11 மற்றும் 12 ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான அனைத்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
அதேபோல, பணிபுரிபவர்களுக்கான தனியார் தங்கும் விடுதிகள் கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான நிலையான வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மேற்படி விடுதிகளில் பணியாற்றும் விடுதி காப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தற்போது கேரள மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று பரவல் நிலையினைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திலிருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ, மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.