தாலிபான் தலைவரிடம் பேசிய இந்திய தூதர் தீபக் மிட்டல், ஆப்கன் மண்ணை இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும், தீவிரவாதத்துக்காகவும் எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறார்.
தாலிபான்களுடன் முதல் முறையாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
காபுல் நகரை கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் காபுல் விமான நிலையம் மட்டுமே ஆப்கனை விட்டு வெளியேற ஒரு வழியாக இருந்து வந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் குடிமக்களை மீட்டு வந்தன. அமெரிக்க படைத்துருப்புகள் முழுமையாக வெளியேற தாலிபான்கள் ஆகஸ்ட் 31 வரை கெடு விதித்திருந்த நிலையில் நேற்றுடன் படைகளை முழுமையாக நீக்கிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா.
ஆப்கனில் புதிய ஆட்சியை தாலிபான்கள் நிறுவ இருக்கும் நிலையில் கத்தார் நாட்டுக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல், தோஹாவில் உள்ள தாலிபான்களின் அரசியல் பிரிவு தலைமையக தலைவரான ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாய் என்பவரை இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு தாலிபான்கள் வேண்டுகோளின்படி நடைபெற்றதாக வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு, ஆப்கனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வருவது குறித்து விவாதத்தில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும், ஆப்கானிஸ்தான் பிரஜைகள், குறிப்பாக இந்தியாவுக்கு வர விரும்பும் சிறுபான்மையினரின் பயணமும் இதில் பேசப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
தாலிபான் தலைவரிடம் பேசிய இந்திய தூதர் தீபக் மிட்டல், ஆப்கன் மண்ணை இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும், தீவிரவாதத்துக்காகவும் எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறார். இதற்கு பதிலளித்த தாலிபான் பிரதிநிதி ஷெர் முகமது அப்பாஸ், இந்தியாவின் பிரச்னைகள் சாதகமான முறையில் தீர்க்கப்படும் என உறுதியளித்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ஆப்கனில் நிலவும் சூழலில் இந்தியாவுக்கான உடனடி தீர்வுகளை கையாளுவதற்காக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழுவை பிரதமர் மோடி அமைத்த நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தில் குல்புஷன் ஜாதவ் வழக்கின் விசாரணைக்கு முன்பாக பாகிஸ்தான் தரப்பு அதிகாரிகள் கை குலுக்க முயன்ற போது, அதற்கு பதிலாக வணக்கம் கூறியவர் கத்தார் நாட்டுக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் என்பது குறிப்பிடத்தக்கது