பெட்ரோல், கேஸ் விலை உயரும் போது மக்கள் பாதிக்கப்படுவார்கள் இந்த விலையை முறைப்படி கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மிக வேகமாக இந்த விலை கட்டுக்குள் வரும். மக்கள் நம்பிக்கையோடு இருக்கள் பாஜக உங்களோடு இருக்கிறது என்று தூத்துக்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக ஊழியர்கள் கூட்டம் பாஜக மாநில தலைவர் அன்னாமலை தலைமையில் தூத்துக்குடியில் தனியார் திருமன மண்டபத்தில் நடந்து. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பாஜக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் அண்ணாமலைக்கு தொண்டர்கள் வீரவாள் பரிசளித்தனர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், பாஜக அடிப்படையில் வளர்ந்து கொண்டிருக்கிறது, மக்கள் மனதிலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அடிப்படை வேலைகளை கையில் எடுத்தால் தான் பாஜகவிற்கு நிரந்தரமான வாக்கு வங்கி கிடைக்கும் என்ற அவர், திமுக 120 நாள் ஆட்சியில் சொன்னது எதையும் செய்ய முடியாத நிலையே நீடிக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது திமுகவிற்கு தெரியும். நீட் தேர்வு ஏழை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். தமிழ் வழியில் படித்த பலர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். புதிய கல்விக்கொள்கை வேண்டும் என்று 51 இலட்சம் பேர் கையொப்பமிட்டுள்ளனா். திமுக நடத்தும் இரண்டு, மூன்று ஊடகங்களின் ஆதரவு பாஜக-வுக்கு இல்லை என்றாா்
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,
தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்து 10 ஆண்டுகாலம் மத்திய அரசின் திட்டங்களை செயல்பாடுகளை கும்பகர்ணன் தூங்கி எழுந்து போல கண்மூடிக்கொண்டு எதிர்த்து வந்தனர். ஆனால் இன்று, ஆட்சிக்கு வந்தும் வேளாண் சட்டம், நீட் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி வந்தபோது “கோ பேக்” மோடி என சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்த திமுகவினர், இன்று அதே திட்டம் தமிழகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என குறிப்பிட்டு அந்த திட்டத்தின் மூலமாக 2000 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டிருப்பதாக தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அதுபோல கொரோனா தடுப்பு பணிக்கு தமிழகத்திற்கு சரியான அளவில் தடுப்பூசி ஒதுக்காமல் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக திமுகவினர் விமர்சித்தனர். ஆனால், தமிழகத்தின் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தேவைக்கு அதிகமாக தடுப்பூசியை தமிழகத்திற்கு ஒதுக்கி மத்திய அரசு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். எனவே, முன்னர் எதிர்கட்சியாக இருந்து விமர்சித்த திமுகவினர் மத்திய அரசை புரிந்து ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர். இதுபோலவே, இன்னும் 3 மாதங்களுக்குள் வேளாண் சட்டங்களையும், நீட் தேர்வு விஷயத்திலும் திமுகவினர் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என நம்புகிறோம்.
பெட்ரோல்விலை, கேஸ் விலை உயரும் போது மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த விலையை மிக விரைவாக முறைப்படி கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மிக வேகமாக இந்த விலை கட்டுக்குள் வரும். பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த முறைப்படி என்ன செய்யமுடியும் என்பதை பாராளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி, நிரந்தர தீர்வாக உள்நாட்டில் அசாம், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு உற்பத்தியை பெருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். மிக வேகமாக பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை பாஜக அரசு கட்டுக்குள் கொண்டு வரும் என்றார்.
கூட்டத்தில், மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.