நீலகிரி: கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இரு டோஸ் தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் காட்டினால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதற்காக பல்வேறு முகாம்கள் நடந்துவரும் நிலையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்கச் செல்வோர் ஆதார் அட்டை, கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சான்றுகளை மதுக்கடை ஊழியர்களிடம் காண்பித்தால் மட்டுமே மது வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையானது, இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து, சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
விரைவில் நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸூம் போடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி சான்றைக் காண்பித்தால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு மது வழங்கப்படும் என்ற நடைமுறையால் மதுப்பரியர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்துவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் இந்த திடீர் அறிவிப்பு மதுப்பிரியர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.