தூத்துக்குடி மாவட்டம் எஸ்.கைலாசபுரத்தில் புதிதாக அமைய உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைலாசபுரம், சவரிமங்கலம், ஜம்புலிங்கபுரம், புதூர் உள்ளிட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த சுற்றுவட்டார பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்
தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரத்தில் புதிதாக சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்கு தனியார் நிறுவனத்தினர் துரிதகதியில் பணிகளை செய்து வருகின்றனர். சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் வெளியூர் நபர்களை பங்கேற்கச் செய்து சிமென்ட் தொழிற்சாலையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கருத்து கேட்பு கூட்டத்தை நிறைவு செய்து விட்டனர். தனியார் நிறுவனத்தினர் சார்பில் நடத்தப்பட்ட அந்த கருத்து கேட்பு கூட்டத்தில் உள்ளூர் நபர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கைலாசபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அப்பகுதியில் சிமெண்ட் தொழிற்சாலை அமைவதை விரும்பவில்லை. சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் அமைய உள்ள அந்த ஆலை பணிகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். இந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இன்று மனு அளிக்க உள்ளோம். சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பது குறித்து உள்ளூர் மக்களிடையே நாங்கள் நடத்திய கையெழுத்து இயக்கத்தின் பலனாக ஒரு கிராமம் ஒன்றிற்கு 350 பேர் வீதம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட நபர்கள் சிமெண்டு தொழிற்சாலைக்கு எதிராக கையெழுத்திட்டு மனு அளித்துள்ளனர். இந்த மனுக்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கும், முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு அனுப்ப உள்ளோம். புதிதாக அமைய உள்ள சிமெண்ட் தொழிற்சாலையினால் அப்பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். பயிர்களில் மகரந்தச் சேர்க்கை என்பது நடைபெறாமல் காய் காய்ப்பது குறைந்துபோகும். மேலும் சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் தூசுகள் இலைகள் மீது படியும் சூழல் ஏற்படுவதால் அதனை உண்டு வாழும் கால்நடைகள் பாதிக்கப்படும். வயிற்று உபாதைகள், நுரையீரல் பிரச்சனை போன்றவை பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மிக அருகிலேயே மருத்துவமனை பள்ளி ஆகியவை செயல்படுவதனால் மாணவர்களுக்கும் சுகாதார கேடு ஏற்படுத்தும். எனவே சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் ஊருக்கு வெளியே இந்த ஆலை அமைப்பதற்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. பொது மக்களுக்கு தொந்தரவு தராத வகையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சிமெண்ட் தொழிற்சாலையை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமானால் சலுகை விலையில் கூட எங்களது நிலங்களை தர தயாராக உள்ளோம் என்றனர்.