தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு கடந்த 1ம் தேதி முதல், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
மேலும், தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பை அடுத்து மாணவர்கள் கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், கடந்த 3ம் தேதி ஒரே நாளில் 3 பள்ளிகளின் மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று புதுக்கோட்டை மாவட்டம், முள்ளுக்குறிச்சி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் இந்த மூன்று மாணவர்களுக்கும் பரிசோதனையின் போது நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அந்தப் பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை, இரட்டை வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு இன்று காலை கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
மாணவிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதை அடுத்து, அந்த தனியார் பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை விடுவதாக பள்ளி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.