கோவை சின்னியம்பாளையம் சோதனைச் சாவடி அருகே கார் ஒன்றில் இருந்து பெண் சடலம் விழுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த காட்சிகளை வைத்து பீளமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை சின்னியம்பாளையம் சோதனைச் சாவடி அருகே சாலை விபத்தில் இறந்த ஒரு பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்டனர். அவருக்கு 50 வயது இருக்கலாம் என தெரிகிறது.
இன்று அதிகாலை மீட்கப்பட்ட அந்த பெண்ணின் சடலத்தின் மீது அடுத்தடுத்து சில வாகனங்கள் ஏறி இறங்கியதால் அந்த உடல் உருக்குலைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் அந்த பெண் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது ஏதோ சாலை விபத்து என நினைத்த பீளமேடு போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அப்போது அந்த பெண் விழுந்து கிடந்த இடத்தின் அருகே ஒரு கார் சென்றது. ஆனால் இந்த சடலமோ பார்ப்பதற்கு அந்த காரில் இருந்து விழுவது போல் பதிவானதால் காரில் வந்தவர்கள் அந்த பெண்ணை சாலையில் தள்ளிவிட்டு அப்போது வாகனங்கள் ஏறி இறங்கியதால் அவர் பலியாகியிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.
மேலும் அந்த பெண்ணை கொலை செய்தும் சடலத்தை வீசியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த சிசிடிவி காட்சியில் அவ்வழியே வரும் வாகனங்கள் அந்த பெண்ணின் மீது ஏறி இறங்கும் காட்சிகள் நெஞ்சை பதற வைக்கிறது. இந்த கார் யாருடையது, இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்து நடந்த இடத்திற்கு அருகே உள்ள கணியூர் சுங்கச்சாவடியில் காரின் விவரங்களை போலீஸார் சேகரித்து தேடி வருகிறார்கள். அந்த பெண்ணுக்கு காரில் வந்தவர்களுக்கும் ஏதேனும் கள்ளக்காதல் விவகாரமாக இருக்குமோ என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இது போல் மர்மமான முறையில் பல கொலைகளும் விபத்துகளும் நடந்துதான் வருகின்றன. ஆனால் காரில் இருந்து தூக்கி எறியும் காட்சிகள் சற்று அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏதேனும் முன் பகையா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.
காரில் இருந்து எதேச்சையாக விழுந்தது போல் தெரியவில்லை. அப்படியிருந்தால், அந்த காரை நிறுத்தி அந்த பெண்ணுடன் வந்தவர்கள் அவரை மீட்டிருப்பார்கள். எனவே இதில் ஏதோ சதி இருப்பதாக போலீஸார் கருதுகிறார்கள். தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது போல் கொலை, கொள்ளை, உள்ளிட்ட சம்பவங்கள் பீதியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.