மதுகுடித்து வந்த தகராறில் சிக்கிய இருவருக்கு “இனி மது அருந்தமாட்டோம்” என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் தான் ஜாமீன் வழங்க முடியும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சியை சேர்ந்த சிவா என்ற நபரும், கார்த்திக் என்ற நபரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் அந்த மனுவில், “கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி நான் மற்றும் என்னுடைய நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்ட அவர்களுடன் சேர்ந்து மது அருந்தினோம்.
அப்போது எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் நாங்கள் அருந்திய மது பாட்டிலை கொண்டு சுரேஷ்யை தாக்கியதாக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் மீது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகும்.
காவல்துறையினர் வழக்குகளில் கணக்கை காண்பிக்கும் நோக்கில் எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், நாங்கள் கடந்த 37 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறோம். கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய எங்களுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம். ஆகவே எங்களுக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.
அப்போது நீதிபதி புகழேந்தி அவர்கள், மது அருந்தி இதன் காரணமாகவே இந்த பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. ஆகவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் நாங்கள் மது அருந்த மாட்டோம் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் வழங்குவதாக கூறி, வழக்கை வருகின்ற திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு உத்தரவிட்டுள்ளார்.