சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கிலும் ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான வழக்கிலும் விரைவில் முடிவு எட்டப்படும், இதில் விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முக்கிய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் அவையில் வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசு இரண்டு முக்கியமான வழக்குகளில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. முதல் வழக்கு கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு. இரண்டாவது வழக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு. தமிழ்நாட்டில் தேர்தலின் போதே கோடநாடு கொலை வழக்கு குறித்தும், ஜெ மரணம் குறித்தும் விசாரிக்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்து இருந்தது.
அதன்படியே ஜெ மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அதேபோல் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தற்போது மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மொத்தம் 5 தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கில் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டும் தடை வாங்க முடியவில்லை. அதிமுக தரப்பும் இந்த வழக்கு விசாரணையை எதிர்த்து இருந்தது. இதில் 60 நாட்களுக்குள் விசாரணை முடிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று அவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்தும், ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை குறித்தும் முக்கிய விவரங்களை பகிர்ந்து கொண்டார். அதில், கோடநாடு வழக்கை தொடர்ந்து நடத்துவோம். இதில் மேல் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. சாட்சியங்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. இதில் உண்மையை வெளியே கொண்டு வர வேண்டியது அரசின் கடமை.
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை மேல் விசாரணை தொடர்ந்து நடைபெறும். உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. இந்த வழக்கில் விரைவில் விசாரணை முடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற அனுமதியோடு இதில் மேல் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக அறிவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். இது தொடர்பாக ஆணையம் பலரிடம் விசாரணை நடத்தி உள்ளது. விரைவில் முழு விசாரணையை முடித்து, அறிக்கையை தாக்கல் செய்ய அறிவுறுத்தி இருக்கிறோம். இந்த விசாரணை முடியும் போது ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள் வெளியே வரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெ மரணம் தொடர்பான விசாரணையில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. 11 முறை இந்த ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் சுமார் 90 சதவிகித விசாரணை முடிந்துவிட்டது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதோடு பொள்ளாச்சி வழக்கு குறித்து பேசிய முதல்வர், பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ அமைப்புதான் இதில் வழக்கு செல்லும் திசையை தீர்மானிக்கும் என்று அறிவித்தார்.