திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனத்திற்கு பின்னர் அன்னதான மண்டபத்தை ஆய்வு செய்தார்.
அப்போது அன்னதான மண்டபம் எந்நேரமும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தனியார் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை பங்களிப்புடன் 150 கோடி ரூபாயில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்வதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
பக்தர்களின் கோரிக்கையின் படி பாதுகாக்கப்பட்ட குடிநீர் கழிப்பிட வசதி முறையாக ஏற்படுத்தப்படும்.
விஐபி தரிசனத்தால் நீண்ட நேரம் காத்திருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
எனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்வது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோகப்பட்டு முடிவெடுக்கப்படும்.
முதலமைச்சரின் துறைசார்ந்த அறிவிப்பின்படி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் நாளை மறுநாள் தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டத்தின்படி நாளை மறுநாள்
முதல் காலை, மதியம், இரவு என கோயில் திறந்து இருக்கும் வரையில் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்படுகிறது.
திருச்செந்தூரில் செயல்படாமல் உள்ள அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளி தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு மீண்டும் செயல்படுத்தப்படும். என்றார் அவர். இந்த ஆய்வின் போது அவருடன் மீன் வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.