தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப் பட்டதை அடுத்து, நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு நியமிக்கப் பட்டார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அவர், இன்று பொறுப்பு ஏற்க உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து நேற்று முன் தினம் சென்னை வந்தடைந்தார். அவரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து அளித்து வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் வரவேற்றனர். தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட் டோரும் வரவேற்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலையில் ஆர்.என்.ரவி பதவி ஏற்கிறார். விழா எளிமையாக நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில், மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த 1976ம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கிய ஆர்.என்.ரவி, மத்திய அரசு உளவு பிரிவின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி கடந்த 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 2019ம் ஆண்டு முதல் நாகலாந்து மாநில ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த அவர், நாகலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தவர்.