பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கும் முடிவே இல்லை என்பது போல அவ்வப்போது அதிரவைக்கும் பாலியல் குற்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாகர் அருகே பி.பி. நகர் எனும் பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் தலித் பெண் ஒருவருக்கு அண்மையில் திருமணம் முடிந்தது. தற்போது தாய் வீட்டிற்கு வந்துள்ள அப்பெண், திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது தாயுடன் சென்றிருக்கிறார். திருவிழாவை முடித்துவிட்டு நள்ளிரவில் இருவரும் தனியாக நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
இதில், இயற்கை உபாதையை கழிப்பதற்காக அந்த 19 வயது பெண் மட்டும் தனியாக ஒதுங்கியிருக்கிறார். ஆனால் சிறிது நேரத்தில் திடீரென மகளின் அலரல் சத்தம் கேட்டதால், பதறித்துடித்த அப்பெண்ணின் தாய், சத்தம் வந்த திசையை நோக்கி ஓடிசென்று பார்த்துள்ளார். எனினும் அவரால் தனது மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
அங்கே தேடிப்பார்த்துவிட்டு மகளை காணாததால் தாமதிக்காமல் தனது வீட்டுக்கு சென்று நடந்தவற்றை குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் அந்தப் பெண் தொலைந்து போன இடத்துக்கு வந்து தேடிப்பார்த்தபோது அங்குள்ள புதரில் மயக்கமடைந்த நிலையில் அந்த 19 வயது பெண் இருப்பதை பார்த்துள்ளனர்.
மயக்கம் தெளிந்த அப்பெண் கூறுகையில், தன்னை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி கரும்பு தோட்டத்துக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்கள் தன்னை சாதி ரீதியில் விமர்சித்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து 19 வயது பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார், அதில் தன்னை நாசம் செய்ததில் தனக்கு அடையாளம் தெரிந்த இருவரின் பெயர்களை புகாரில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெண் சுட்டிக்காட்டிய இருவரை கைது செய்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதால் பலரும் அம்மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.