தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவற்றை பறிமுதல் செய்வதற்கும், அவற்றை தடுப்பதற்கும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.*
*அவரது உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ரவிக்குமார், தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் திரு. சந்தோஷ செல்வம், காவலர்கள் திரு. சந்தனக்குமார், திரு. பரத் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாலுமாவடி பணிக்கநாடார் குடியிருப்பு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோயம்புத்தூர் உடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் சுடலைமணி (46) என்பவர் ஓட்டி வந்த மினி சரக்கு வாகனத்தை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 264 கிலோ எடை கொண்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கோயம்புத்தூரிலிருந்து பணிக்கநாடார் குடியிருப்பு மேற்கு தெருவைச் சேர்ந்த தங்கதுரை மகன் மகேஷ்வரன் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் மேற்படி சுடலை மணியை கைது செய்து, அவர் கடத்தி வந்த சுமார் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 264 கிலோ புகையிலைப் பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர், தலைமறைவாக உள்ள மகேஷ்வரனை தேடி வருகின்றனர். இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*
*தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 8 மாதங்களில் மட்டும் கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என 240 வழக்குகள் பதிவு செய்து 275 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான 280 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.*
*மேலும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் என 1138 வழக்குகள் பதிவு செய்து 1146 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 66,25,000/- (அறுபத்து ஆறு லட்சத்து இருபத்து ஐந்தாயிரம்) மதிப்புள்ள 22,200 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.*
*அதே போன்று இந்த ஆண்டு கடந்த 8 மாதத்தில் மட்டும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் உட்பட 136 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.*
*போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.*