ராமநாதபுரத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பில் புதிய அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், தரமற்ற முறையில் கட்டிட பணிகள் நடைபெற்று வருவதாக கூறி அதனை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூபாய் 60 லட்சம் மதிப்பிலான புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், கட்டுமான பணிகள் அனைத்தும் தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் கூறி அப்பகுதி கிராம இளைஞர்கள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளுடன் மகப்பேறு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ள நிலையில், இந்த கட்டுமானப் பணிகள் அனைத்தும் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி தற்போது நடைபெற்று வரும் பணியை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை கட்டுமான பணி இளநிலை பொறியாளர் ஜவகர் கூறுகையில், தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக்குழுவினர் அவ்வப்பொழுது அங்கு ஆய்வு செய்து கட்டிடத்தின் தரத்தை உறுதி செய்து அதற்கான சான்று அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆனால் தற்போது தற்காலிகமாக பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அதற்கான பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.