விளையாட்டு

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ! மும்பையை வீழ்த்தி சென்னை முதலிடம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட இந்த வருட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டி துபாயில் நேற்று துவங்கியது.

முதல் பாதியில் 29 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 30 வது போட்டியான நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டூபிளசிஸ் (0), மொய்ன் அலி (0), ரெய்னா (4), தோனி (3) என சீனியர் வீரர்கள் அனைவரும் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், இறுதி வரை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்துராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலமும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய பிராவோ 8 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 156 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களான டி காக் மற்றும் அன்மோல்ப்ரீட் சிங்கை, தீபக் சாஹர் தனது துல்லியமான பந்துவீச்சால் வெளியேற்றினார்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சூர்யகுமார் யாதவ் (3), இஷான் கிஷன் (11), பொலார்டு (13) என மும்பை அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் ஏமாற்றம் கொடுத்ததாலும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் அரைசதமும் அடித்த சவுரவ் திவாரியும் அதிரடியாக விளையாட தவறியதாலும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.

இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 6வது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதன் மூலம் புள்ளி பட்டியலிலும் டெல்லி கேப்பிடல்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button