சர்ச்சைக்குரிய சுவரொட்டியை ஒட்டிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள கொட்டப்பட்டு பகுதியில் சின்ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை பொன்மலைப்பட்டி கடைவீதியில் வைத்து மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். இதனால் பொன்மலைப்பட்டி, கல்கண்டார்கோட்டை போன்ற பகுதிகளில் சின்ராசுவின் நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டியில் அச்சிடப்பட்ட விரைவில் என்ற வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சார்லஸ் என்பவர் சின்ராசுவின் நண்பர்களிடம் கேட்டுள்ளார். அப்போது சின்ராசவின் அண்ணன் ரமேஷ், நண்பர்களான ஜோஸ்வா, டார்வின், நந்தா, மணிகண்டன் ஆகியோர் சார்லசுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சார்லஸ் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.