நல்ல மனநல மருத்துவரை பரிந்துரைக்கிறேன், நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று, அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமனுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காத நிலையில், பாஜக, அதிமுக மற்றும் பிற தமிழக எதிர்க்கட்சி ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் விமர்சனமாக முன் வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால், 17ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் நிலையில், தாமதமாகத்தான் தனக்கு மத்திய அரசு தரப்பு தகவல் அளித்ததாகவும், மீட்டிங்கில் பேச வேண்டிய அஜென்டாவும் அதை விட தாமதமாக தரப்பட்டதாகவும், எனவேதான் ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.
மேலும் தனது செய்தியாளர் பேட்டியின்போது, ஏற்கனவே பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்ட நிலையில் தாமதமாக ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பான விஷயங்களை தெரிவித்ததாக விமர்சனம் செய்தார். இப்போது கூட நேரா ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போக வேண்டியுள்ளது என்றும் தனது பேட்டியில் பிடிஆர் தெரிவித்தார்.
அதேநேரம், பிடிஆர் பேட்டி அம்சங்களை வைத்து போலியான செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலவ விடப்பட்டன. பிடிஆர் தனது கொளுந்தியார் மகள் பூப்புனித விழாவில் பங்கேற்க, சென்றதால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று பேட்டியளித்ததாக போலி செய்திகள் பரவின.
பாஜகவை சேர்ந்த ஒரு பெண்மணி இவ்வாறு ஒரு போட்டோஷாப் புகைப்படத்தை ஷேர் செய்த நிலையில், மாட்டு சிறுநீர் குடிப்பதால் மூளை கெட்டு விட்டதா என்று கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில்தான், அரசியல் விமர்சகரும், மருத்துவருமான சுமந்த் சி.ராமன், வெளியிட்ட ஒரு ட்வீட்டுக்கும் காட்டமாக பதிலிளித்துள்ளார் பிடிஆர். இதே ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு, ஆம்.. ஒரு சந்தேகமும் தேவையில்லை என்று சுமந்த் ராமன் பதிலளித்திருந்தார்.
இதை ரீட்வீட் செய்துள்ள பிடிஆர், நண்பா… முகமற்ற அக்கவுண்ட்களில் இருந்து, பொய்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனையான அறிக்கைகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் அளவுக்கு நீங்கள் மிகவும் தாழ்ந்துவிட்டீர்களா? நான் உங்களுக்கு ஒரு நல்ல மனநல மருத்துவரை பரிந்துரைக்கிறேன். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மேலும் ஒரு ட்வீட்டில், பாஜக பெண்மணிக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிடிஆர். அவர் கூறுகையில், ஒன்றுக்கொன்று முரண்பாடான 2 பொய்களை சொல்ற முட்டாள்களே, நான் கூட்டத்திற்கு செல்லாதத விழாவிற்காகவா?
அல்லது நான் எப்போதும் புறக்கணிக்கும் தனிவிமானம் இல்லாததாலா? கூட்டம் டெல்லியிலா? லக்னோவிலா? அநாகரீகமாக எனது மனைவியை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள், மாட்டுச்சாண மூளை கொண்டவரே, இவ்வாறு பிடிஆர் காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார்.