தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பாகத் தகுதியுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசிகளைப் போடுவதற்காக வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டுமென்று கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
”தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கி, கரோனா தொற்றுக்கு எதிரான எங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து வரும் மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் ஆரம்பக்கட்ட முதல் 4 மாதத் தடுப்பூசி செலுத்துதலில் போதிய வேகம் இல்லாததால், தற்போது தமிழகத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை, தேசிய சராசரியை விடக் குறைவாக உள்ளது. இதனால் கடந்தகாலப் பற்றாக்குறையை ஈடுசெய்ய, தமிழகத்துக்கு உடனடியாகக் கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.
இதனால் தினசரி தடுப்பூசி செலுத்தும் பணியோடு, தமிழகத்தில் இரண்டு மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. 12-9-2021 அன்று நடத்தப்பட்ட முகாமில் 28.91 லட்சம் கரோனா தடுப்பூசிகளும் 19-9-2021 அன்று நடத்தப்பட்ட முகாமில் 16.43 லட்சம் கரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன. இந்த மாதத்தின் முதல் 19 நாட்களில் சுமார் 1 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. எனினும் தமிழகத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை, தேசிய சராசரியை விடக் குறைவாக உள்ளது.
இதுவரை மத்திய அரசு 3.97 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது. மாநிலத்தில் மக்கள்தொகை மற்றும் இதுவரை தடுப்பூசி செலுத்தாத மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மெகா கரோனா தடுப்பூசி முகாம்களைச் சீரான இடைவெளியில் நடத்த வேண்டியுள்ளது. அதேபோல அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பாகத் தகுதியுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசிகளைப் போட வேண்டியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் 50 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்களை வெற்றிகரமாகச் செலுத்த முடியும் என்பதால், அந்த எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசிகளை உயர்த்தி வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.