பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகளிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டை அடுத்த கோவில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; விவசாயி
மாற்றுத்திறனாளியான இவர், வேன் மூலம் தக்காளி வியாபாரம் செய்து வந்தார்.இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 20 – 17 வயதில் மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சென்னையில் தங்கி, ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். இளைய மகள், அவலுார்பேட்டையில் பிளஸ் 2 படித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், தன் தந்தை வெங்கடேசன் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு, இறந்து கிடப்பதாக அருகில் வசித்தவர்களிடம் இளைய மகள் தெரிவித்தார்.செஞ்சி டி.எஸ்.பி., இளங்கோவன், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன், செஞ்சி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி, அவலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத், தடயவியல் நிபுணர் சண்முகம் ஆகியோர் இரவு 9:00 மணியளவில் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.போலீஸ் மோப்ப நாய் ராக்கி, இளைய மகளையே சுற்றிச் சுற்றி வந்ததால், சந்தேகம் எழுந்தது. விசாரணையில், தந்தையை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு குடிபோதையில் வந்த வெங்கடேசன், இளைய மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த இளைய மகள் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தந்தையின் மார்பில் குத்திக் கொலை செய்துள்ளார்.வெங்கடேசனின் அக்காள் பச்சையம்மாள் புகாரின்படி, அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, இளைய மகளிடம் விசாரித்து வருகின்றனர்.