அரசியல்செய்திகள்

‘போதும் போதும் நிறுத்துங்க’ பிடிஆர் பழனிவேலுக்கு திமுக தலைமை எச்சரிக்கை

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் செயல்படும் விதம் திமுக மேலிடத்தை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது.

இதுபோன்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தி மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கக் கூடாது என்று, கட்சி மேலிடம் அவருக்கு எச்சரிக்கை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.எஸ்.இளங்கோவன், அளித்துள்ள ஒரு பேட்டி இதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தளவில், பிற அமைச்சர்களை விடவும், எப்போதும் செய்திகளில் அடிபடக் கூடிய அமைச்சர் பெயர் என்றால் அது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர்தான். மெத்த படித்தவர், பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் நாட்டிலேயே இவர் அளவுக்கு தகுதியான நிதியமைச்சர் இல்லை என்ற ரீதியில் ஆரம்பத்தில் அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. தேசிய ஊடகங்கள் கூட இதில் விதி விலக்கு கிடையாது. ஆனால் சமீப காலமாக, ட்விட்டரில் பிடிஆர் வெளியிடும் ட்வீட்டுகள் தொடர்பாகத்தான் செய்திகள் வெளியாகிக் கொண்டுள்ளன.

அது வானதி சீனிவாசனோ, அண்ணாமலையோ, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ.. யாராக இருந்தாலும் சரி, காரசாரமாக விட்டு விளாசுவது போல பதில் சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் பிடிஆர். இவரது இந்த காரசார பதில்கள் நெளிவு சுளிவு அரசியலுக்கு ஒத்துவராது என்ற முனுமுனுப்பு திமுக சீனியர்களிடம் ரொம்ப நாட்களாகவே இருக்கிறதாம். ஏனெனில் அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்பார்கள். பிடிஆர் சொல்லும் பதிலடிகள், நிரந்தர எதிரிகளை உருவாக்கிவிடுமே என்ற அச்சம் சிலருக்கு இருக்கிறதாம்.

இருப்பினும், மனதில் பட்டதை அப்படியே கூறிவிடுவது பிடிஆர் வழக்கம். ஜக்கி வாசுதேவில் ஆரம்பித்து இப்போது, ஜிஎஸ்டி கூட்டம் வரை எந்த விஷயத்தையும் விட்டு வைப்பதில்லை பிடிஆர். இவரது இந்த பதிலடிக்கு, இணையதளத்தில் உள்ள சில நெட்டிசன்கள், ஆஹோ, ஓஹோ என்று புகழுரைத்து, அவருக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். ஆனால் யதார்த்த அரசியல் என்பது வேறு. இதைப் பற்றிதான் திமுக சீனியர்கள் கவலைப்படுகிறார்கள். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கும் அவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில்தான், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்கவில்லை. இதற்கு வேறு, ஏதாவது ஒரு காரணத்தை சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால் தனது பேட்டியின்போது, “ஜிஎஸ்டி கூட்டம் பற்றி ரொம்ப லேட்டாக சொல்லிவிட்டார்கள். முன்கூட்டியே நிறைய கமிட்மென்ட் கொடுத்து விட்டேன். இப்போ கூட ஒரு வளைகாப்புக்கு போக வேண்டியுள்ளது..” என்று பதிலளித்து விட்டார் பிடிஆர்.

அவர் வளைகாப்பு எனக் குறிப்பிட்டாரே தவிர அரசு சார்பில் நடைபெறும் சமுதாய வளைகாப்பு விழா என அப்போது தெரிவிக்கவில்லை. வளைகாப்புக்கு போவதுதான் முக்கியம், ஜிஎஸ்டி முக்கியமில்லை என்ற தொனி அவரது பேட்டியில் இருந்ததாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டன. சில எதிர்க்கட்சி நெட்டிசன்கள், ஒருபடி மேலே போய், கொளுந்தியார் வீட்டு வளைகாப்புக்கு பிடிஆர் போகிறார் என்று போலி செய்திகளை பரப்பி விட்டனர். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பது போன்ற முக்கிய விஷயங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் பேசப்பட்டது. அதில் பிடிஆர் பங்கேற்காததும், அதற்கு அவர் கூறிய காரணமும், எளிதாக மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளால் நெகட்டிவாக பிரச்சாரம் செய்ய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. இது திமுக இமேஜுக்கு விழுந்த அடி.

இந்த நிலையில்தான், திமுக தலைமை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு இனிமேல் இப்படி லூஸ் டாக் விட வேண்டாம் என்று எச்சரிக்கை பிறப்பித்துள்ளதாம். இதுதான் இளங்கோவன் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியிலும் எதிரொலித்தது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று எனக்கு தெரியவில்லை என்று ரொம்பவே ஓபனாக பிடிஆர் முடிவு தன்னிச்சையானது என்ற தொனியில் பேட்டியளித்துள்ளார் இளங்கோவன்.

தலைமையின் சமிக்ஞை இல்லாமல் இப்படி இளங்கோவன் பேட்டியளித்திருக்க மாட்டார் என்பது திமுக வட்டார தகவல். உறுதியான மற்றும் இறுதியான எச்சரிக்கை பிடிஆருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதற்கான சிக்னல்தான் இளங்கோவன் பேட்டி என்கிறார்கள். எனவே வரும் நாட்களில் பிடிஆர் தனது ஆவேசத்தை குறைத்துக் கொண்டு, துறை சார்ந்த விஷயங்களை மட்டுமே பேச வாய்ப்பு இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ம்.. பொறுத்திருந்து பார்ப்போம்!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button