கோவையில் ஒரு வயது குழந்தையின் வாயில் பிஸ்கட்டை கவரை திணித்து கொலை செய்த கொடூர பாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் கவுளிபிரவுன் பகுதியை சேர்ந்தவர்கள் நித்யானந்தம், நந்தினி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் துர்கேஷ் (வயது 1).
இதனிடையே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி தனது இளையமகன் துர்கேஷை அழைத்துக்கொண்டு ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தனது தாய் நாகலட்சுமி (வயது 52) வீட்டில் தங்கியிருந்தார்.
தொடர்ந்து நந்தினி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். தினமும் காலை 8 மணிக்கு வேலைக்கு செல்லும் அவர் இரவு 9 மணிக்கு வீட்டிற்கு திரும்புவார். குழந்தை துர்கேசை நந்தினியின் தாயார் நாகலட்சுமி கவனித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்றும் வழக்கம் போல நந்தினி வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பினார். அப்போது துர்கேஷ் பேச்சு மூச்சு இல்லாமல் தொட்டிலில் தூங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து, குழந்தையை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதனைத்தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சிறுவனின் கை கால் உடம்பு முழுவதும் சிறு சிறு காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் குழந்தையின் தாயிடமும், பாட்டி நாகலட்சுமியிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, நாகலட்சுமி குழந்தையை தாக்கியதை ஒப்புக்கொண்டார்.
துர்கேஷ் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வாயில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், நேற்றும் இதேபோல செய்ததால் கோபமடைந்த நாகலட்சுமி வீட்டில் இருந்த பிஸ்கட் கவரை எடுத்து குழந்தையின் வாயில் திணித்து தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டதும், சிறிது நேரத்தில் குழந்தை மூச்சு திணறி இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து நாகலட்சுமியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பேரக் குழந்தையை குறும்புத்தனத்தை தாங்க முடியாத பாட்டி, குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.