சென்னையை அடுத்த பனையூரில் சாலை விரிவாக்கத்திற்காக சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் சசிகலாவுக்கு சொந்தமான தென்னந்தோப்பு மற்றும் பழத்தோட்டம் உள்ளது. சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் இந்த நிலத்தின் ஒரு பகுதி (784 சதுர மீட்டர்)மற்றும் அருகில் உள்ள நிலங்களை சாலை விரிவாக்க திட்டத்திற்காக கையகப்படுத்த கடந்த 2010 ம் ஆண்டு நில கையகப்படுத்தலுக்கான சிறப்பு வட்டாட்சியர் நடவடிக்கையை மேற்கொண்டார். சசிகலாவுக்கு நோட்டீசும் அனுப்பினார். உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நில கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து கடந்த 2011ம் ம் ஆண்டு சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலைத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சாலை விரிவாக்க திட்டத்திற்கு அந்த நிலம் அவசியமானது என்றும்,கையகப்பபடுத்தும் நடவடிக்கைகைகள் ஏற்கனவே எழுத்து பூர்வமாக முடிந்து விட்டதாகவும், வழக்கு நிலுவையில் இருப்பதன் காரணமாக நிலம் இன்னும் கையகப்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் உரிய இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சசிகலா தரப்பில், நில இழப்பீடு தொடர்பாக தனக்கு எந்த ஒரு நோட்டீசும் வரவில்லை என்றும், இது தொடர்பான கூட்டத்தில் தானோ தனது பிரதிநிதியோ பங்கேற்கவில்லை என்பதால் நிலம் கையப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி இளத்திரையன், சாலை விரிவாக்கத்திற்காக சசிகலாவின் நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தும் அரசு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.