பாகிஸ்தானில் 3 நாள் ஒரு போட்டிகளில் விளையாடவிருந்த நியூசிலாந்து வீரர்களுக்குப் பாதுகாப்பு அளித்த பாகிஸ்தான் போலீசார் ரூ.27 லட்சத்திற்கு பிரியாணி சாப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஹோட்டல் நிர்வாகம் அனுப்பிய பில்லைப்பார்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, கடந்த 18 ஆண்டுகளுக்குப்பிறகு, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், ஐந்து டி 20 போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தனர். ஆனாலும் இவர்கள் மனதில் ஏதோ ஒரு அச்ச உணர்வு இருந்துள்ளது. அதற்கு காரணம் கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விளையாடச்சென்ற இலங்கை கிரிக்கெட் அணி மீது, பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வீரர்கள் சிலர் காயமடைந்த நிலையில், வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் யாரும் பாகிஸ்தான் வந்து விளையாட மறுப்பு தெரிவித்தனர். இருந்தபோதும் தைரியத்துடன் நியூசிலாந்து அணி வந்திருந்தாலும், அவர்கள் பாதுகாப்பு இல்லை என தெரிவித்து விளையாட மறுத்துவிட்டதோடு பாகிஸ்தானிலிருந்து வெளியேறினர். இப்படி திடீரென நியூசிலாந்து அணி தொடரை ரத்து செய்தது கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் சிக்கலையும், பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியது.
இந்தப் பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்குள் நியூசிலாந்து வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் சாப்பிட்ட உணவுக்கான பில் ரூ. 27 லட்சம் என வந்துள்ளதைப் பார்த்த கிரிக்கெட் வாரியம் மேலும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
அப்படி என்ன தான் நடந்தது? ஏன் இவ்வளவு தொகைகு பில் வந்துள்ளது? என அறிந்துக்கொள்ள முயன்றனர். அப்போது தான் பாகிஸ்தானில் எங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என நியூசிலாந்து அணி தெரிவித்து வந்த நிலையில், அவர்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பதற்காக, இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் பாகிஸ்தான் இராணுவத்துடன் 500-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதில் போலீசாரைத் தவிர்த்து காமாண்டோ பிரிவினர், எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களும் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பிரியாணி வழங்கப்பட்ட நிலையில், இதனுடைய பில் தொகைதான் சுமார் ரூ. 27 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த தொகை குறித்த பில்லை ஹோட்டல் நிர்வாகம் பாகிஸ்தான் நிதியமைச்சகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இது பிரியாணிக்கான பில்தான் எனவும், இது தவிர வேறு பிற உணவுகளுக்காக பில்லையும் ஹோட்டல் நிர்வாகம் அனுப்ப உள்ளதாம். இச்சம்பவம் கிரிக்கெட் வாரியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நியூசிலாந்து அணி பாதுகாப்பின்மையை காரணம் காட்டி விளையாட மறுத்துவிட்ட நிலையில், பிரியாணிக்கான பில் மேலும் அதிர்ச்சியை கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்படுத்தியது. இதனை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது. இந்நிலையில்தான், நியூசிலாந்து அணியின் இந்த முடிவு எங்களின் வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பக்கத்து நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளதால் , மற்ற நாடுகளில் பாகிஸ்தான் வர தயங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் எங்கள் மீதான நம்பகத்தன்மை ஏற்படுத்த முயல்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.