சினிமாசெய்திகள்

‘ஜெயில் நல்ல பாடம் கத்துகுடுத்துருச்சுப்போல’ நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட மீரா மிதுன் யாருக்கும் தெரியாமல் விருட்டென்று காரில் பறந்துவிட்டார்

பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகை மீரா மிதுன். அவருக்கு உடந்தையாக அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தார்.

இது தொடர்பாக மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். மேலும் மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் மீரா மிதுன் போலீசார் விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பி ஓடி தலைமறைவானார். கேரளாவில் பதுங்கி இருந்த மீரா மிதுனை போலீசார் பெரும் போராட்டத்துக்கு இடையே கைது செய்தனர். அப்போது கூச்சலிட்டபடியே வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் மீரா மிதுன். இதனைத் தொடர்ந்து அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜாமீன் மனு
இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் தரப்பில், 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாலும், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் சோர்வு ஏற்பட்டிருப்பதாகவும் ஜாமீன் வழங்க கோரியது.

இதை பதிவு செய்த நீதிபதி, நடிகை மீராமிதுன், அவரின் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் மேலும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தினமும் இருவரும் கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து மீரா மிதுன், சாம் அபிஷேக் இருவரும் நிபந்தனை ஜாமீனில் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

பொதுவாக ஊடகங்கள் முன்பாக வாய்க்கு வந்ததையெல்லாம் உளறி கொட்டுவார் மீரா மிதுன். ஆனால் புழல் சிறையில் இருந்து வெளியே வந்த மீரா மிதுன் நுழைவு வாயில் இருந்த போலீசாரிடம் அனுமதி சீட்டை காண்பித்தார். அங்கு பத்திரிகையாளர்கள் கூடி இருந்த போதும் எந்த அமளியும் செய்யாமல் காரில் ஏறி அமர்ந்து விருட்டென வீட்டுக்கு சென்றார் மீரா மிதுன்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button