எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் நாகுகுநேரி தொகுதியில் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாங்குநேரியை சேர்ந்த ஐயப்பன் என்பவரது பெயரில் இந்த சுவர் விளம்பரம் வரையப்பட்டுள்ளது.
தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நிறைவேற்றத் தவறிவிட்டார் என புகார் தெரிவிக்கப்படுகிறது.
நெல்லை மாவட்ட நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரூபி மனோகரன். சென்னையில் மிகப் பெரியளவில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் இவர் தமிழகத்தின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் சீட் கொடுக்கப்பட்ட போதே எதிர்ப்புகள் கிளம்பின.
இருப்பினும் எதிர்ப்பாளர்களை அழைத்து பேசி சமாதானம் செய்து ரூபி மனோகரனுக்கு நாங்குநேரி தொகுதியை கொடுத்தது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை. தேர்தலின் போது உள்ளூர் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி இவைகளை எல்லாம் சரி செய்து கொடுப்பேன் என ரூபி மனோகரன் உறுதியளித்திருக்கிறார். ஆனால் வெற்றி பெற்று 5 மாதங்களாகியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் என குற்றஞ்சாட்டுகிறார் ஐயப்பன் என்பவர்.
மேலும், இவர் வரைந்துள்ள சுவர் விளம்பரத்தில் தில்லுக்கு விஜயன், சொல்லுக்கு அரிச்சந்திரன் , சொன்ன சொல்ல காப்பாற்ற தவறமாட்டார் ரூபி மனோகரன், இவரை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் நாங்குநேரியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சத்தியமூர்த்தி பவன் கவனத்துக்கும் வந்திருக்கிறது.
ரூபி மனோகரன் சென்னையிலேயே அதிகமாக தங்கிக்கொள்கிறார் என்பதும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதும் ஐயப்பன் தரப்பு குற்றச்சாட்டாகும். மேலும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை கூட இன்னும் முறைப்படி திறக்கவில்லை என்பதும் இவரது புகாராக உள்ளது. இதனிடையே இந்த புகாரை மறுக்கும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தரப்பு, தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை படிபடியாக நிறைவேற்றி வருவதாக தெரிவிக்கிறது