காவல் துறையில் உச்ச பதவியான டிஜிபி பதவிக்கு தமிழக காவல்துறை முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இந்நாள் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட 5 ஏடிஜிபிக்களுக்கு பதவி உயர்வு அளிக்க நிலை உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவுடன் சேர்த்து 11 டிஜிபிக்கள் உள்ளனர். (இந்த மாத இறுதியில் ஒருவர் ஓய்வு பெற உள்ளார்) தற்போது 1990 ஆம் ஆண்டு பேட்ச் ஏடிஜிபிக்களாக உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் டிஜிபி பதவி உயர்வுக்காக காத்திருக்கும் நிலையில் தற்போது அவர்களுக்கு டிஜிபி பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் உயர்ந்த பதவி இறுதியான பதவி டிஜிபி பதவி ஆகும். அதில் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி ஆகும். ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.எஸ்.பியாக பதவியில் இணைந்து எஸ்.பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என 5 கட்ட பதவி உயர்வை அடைகிறார்கள்.
இதில் டிஜிபி பதவியை மட்டும் மாநில அரசு அளிக்க முடியாது. பரிந்துரை செய்தால் அது யுபிஎஸ்சியால் அங்கிகரிக்கப்படும். அதன்பின்னரே அவர்களுக்கான பணியிடம் ஒதுக்க முடியும். தற்போதுள்ள டிஜிபிக்கள் எண்ணிக்கையுடன் சேர்த்து 16 பேர் டிஜிபிக்களாக இருப்பார்கள்.
புதிதாக டிஜிபிக்களாக நிலை உயர்த்தப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் வருமாறு.
1. சங்கர் ஜிவால் ( சென்னை காவல் ஆணையர்). பிஹாரைச் சேர்ந்தவர். 2022 அக்டோபரில் ஓய்வு.
2. ஏ.கே.விஸ்வநாதன் ( ஏடிஜிபி, காவலர் வீட்டு வசதி வாரியம்) தமிழகத்தைச் சேர்ந்தவர். 1964 ஜூலை மாதம் ஓய்வு.
3. ஆபாஷ்குமார் (ஏடிஜிபி – உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு ) பிஹாரைச் சேர்ந்தவர். 2025 மார்ச் மாதம் ஓய்வு.
4.டி.வி. ரவிச்சந்திரன் (ஏடிஜிபி. மத்திய அயல்பணியில் ஜெர்மன் தூதரகத்தில் பணியாற்றுகிறார் ) ஆந்திராவைச் சேர்ந்தவர். 2024 ஆகஸ்டு மாதம் ஓய்வு.
5. சீமா அகர்வால் (ஏடிஜிபி தலைமையிடம் சென்னை ) ராஜஸ்தானைச் சேர்ந்தவர். 2026 ஜூன் மாதம் ஓய்வு.
மேற்கண்ட அதிகாரிகள் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெறும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் பெரிய அளவில் பணியிட மாற்றம் நடக்கும் என தெரிகிறது.