கருமத்தம்பட்டி;”அருகில் உள்ள ஊராட்சிகளை இணைக்காமல், தற்போதுள்ள பரப்பின் அடிப்படையில், கருமத்தம்பட்டி உள்ளிட்ட நான்கு பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த ஆட்சேபணை இல்லை,” என்று, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனருக்கு, கோவை கலெக்டர் அனுப்பியதாக கூறப்படும் கடிதம், சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால், மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை உள்ளிட்ட நான்கு பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும், என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.அதன் அடிப்படையில், சம்மந்தப்பட்ட பேரூராட்சிகளின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், அருகில் உள்ள ஊராட்சிகளின் தற்போதைய தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.தொடர்ந்து அந்தந்த பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
பேரூராட்சிகளை சேர்ந்த மக்கள், முன்னாள் பிரதிநிதிகள் நகராட்சியாக்க ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கவில்லை. ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், நகராட்சியுடன் தங்கள் பகுதியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று, அனைத்து பகுதி மக்களும் எதிர்பார்த்து உள்ளனர். இதற்கிடையில், நகராட்சி நிர்வாகத் துறைக்கு, கோவை கலெக்டர் அனுப்பியதாக கூறப்படும் கடிதம், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அதில், தற்போது உள்ள பரப்பின் அடிப்படையில், பேரூராட்சி பகுதிகளை நகராட்சியாக தரம் உயர்த்த, பேரூராட்சி மக்கள் யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.இது குறித்து, சம்மந்தப்பட்ட பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அருகில் உள்ள ஊராட்சிகளை சேர்ந்த மக்கள், தங்கள் பகுதியை நகராட்சியுடன் இணைப்பதால், 100 நாள் வேலை உறுதி திட்டம், பசுமை வீடுகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான உதவிகள் கிடைக்காது என்பதால், ஆட்சேபணை செய்துள்ளனர்.அதனால், தற்போதுள்ள பரப்பின் அடிப்படையில் நகராட்சியாக தரம் உயர்த்த, பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுகளின் பிரதிகள், உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.கணியூர் மக்கள் கூறுகையில், ‘ஊராட்சி பகுதிகளை, கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியுடன் இணைக்க கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை.
முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையில், கலெக்டர் அனுப்பியதாக கூறப்படும் கடிதம் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றனர்.மக்கள் தொடர்பு அலுவலகத்தில்நைட் டூட்டி; கலெக்டர் உத்தரவா?சமீப காலமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து பத்திரிகைகளுக்கு மிகவும் தாமதமாகவே பிரஸ் ரிலீஸ் அனுப்பப்படுகிறது. மாலையில் நடக்கும் நிகழ்வுக்கான ரிலீஸ் என்றால் பரவாயில்லை; பகலில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் இரவு 9:00 மணிக்கு மேல்தான் ரிலீஸ் அனுப்பப்படுகிறது. இதற்கிடையே, இப்படி கலெக்டர் கையெழுத்தே இல்லாமல் ஒரு கடிதம் வேறு. என்னதான் நடக்கிறது மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தில்?