தென் தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களில் பசுபதி பாண்டியன் கொலைக்கு தனி இடமுண்டு. தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் தான் கொலையுண்ட பசுபதி பாண்டியன்.
இவருக்கும் பண்ணையார் குடும்பத்திற்கும் 90களில் இருந்தே முட்டல், மோதல் உரசல்கள் இருந்துவந்தன. மோதல் முற்றி அசுபதி பண்ணையாரையும் அவரது தந்தை சிவசுப்பிரமணியத்தையும் பசுபதி பாண்டியனும் அவரது ஆட்களும் கொலை செய்தனர். இதிலிருந்தே இரு தரப்பினருக்கும் மோதல் நீடித்து வந்தது. இச்சூழலில் வெங்கடேஷ் பண்ணையாரை காவல் துறையினர் என்கவுண்டர் செய்தனர்.
இதற்குப் பின் பழிக்குப் பழி கொலைகள் தொடர்ந்துகொண்டே வந்தன. 2006ஆம் ஆண்டு பசுபதியின் மனைவி ஜெசிந்தாவை பண்ணையார் ஆட்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். கடைசியில் 2012ஆம் ஆண்டு பசுபதி பாண்டியனும் திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் அவரது வீட்டு முன்பே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்கு நடுவிலேயே 4 பேர் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டனர்.
சுபாஷ் பண்ணையார்
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் நந்தவனப்பட்டியை சேர்ந்த நிர்மலா (69) என்பவர், இரு தினங்களுக்கு முன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தாடிக்கொம்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடிவந்தனர். இதனிடையே நேற்று திருச்சி ஜே.எம்.4 நீதிமன்றத்தில் திண்டுக்கல் சீவல் சரகு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டி(18), சங்கிலி கருப்பன்(28), தமிழ்ச்செல்வன் (22), வேடசந்தூரைச் சேர்ந்த ரமேஷ்குமார் (33), அம்புலிப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த முத்துமணி(23) ஆகியோர் சரணடைந்தனர். சரணடைந்த 5 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் குமார் உத்தரவிட்டுள்ளார்.