வடதில்லை கிராமத்தில் நடவு செய்த 10 நாட்களில் நெற்பயிர்கள் கருகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை அருகே பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வடதில்லை கிராமத்தில் வடதில்லை, பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம் போன்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சுமார் 150 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இவர்கள் டிகேஎம் 13 ரக நெல் விதைகளை போந்தவாக்கம் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் வாங்கி கடந்த மாதம் இதை நாற்றுக்காக பயிர் செய்தனர். இதை 30 நாட்களுக்கு பிறகு பரித்து நடவு செய்தனர். இந்நிலையில், நடவு செய்த 10 நாட்களிலேயே இந்த நெல் பயிர்கள் திடீரென கருகி சேதமானது. இதனை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது, `நாங்கள் போந்தவாக்கம் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கடந்த மாதம் டிகேஎம் 13 ரக நெல் விதைகளை வாங்கி நாற்று நட்டோம்.
இதில், நாற்று நன்றாகவே வளர்ந்தது. அதை நடவு செய்த 10 நாட்களிலேயே நட்ட பயிகள் அனைத்தும் கருகி விட்டது. தண்ணீர் விட்டோம், மருந்து தெளித்தோம், ஆனால் பயிர் வரவில்லை. பின்னர், வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தோம், அவர்கள் வந்து கருகிய பயிர்களை பார்வையிட்டனர். ஆனால், அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 100 முதல் 150 ஏக்கர் வரை பயிர்கள் கருகியுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இந்த பயிர்கள் மர்ம நோயால் பாதிக்கபட்டிருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திருவள்ளூர் கலெக்டர் மற்றும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,’ என்று கூறினர்.