சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் முக ஸ்டாலின் வீடு முன்பாக தென்காசியை சேர்ந்த வெற்றிமாறன் என்ற நபர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 சதவிகித தீக்காயங்களுடன் அந்த பிரமுகர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருக்கிறார்.
உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக இந்த தீக்குளிப்பு நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
தமிழகம் முழுக்க விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி வேட்புமனுத்தாக்கல், வேட்புமனு பரிசீலனை போன்ற அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோலத்தான் நெல்லை மற்றும் அந்த மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டங்களிலும் தேர்தல் களை கட்டியுள்ளது.
இந்த நிலையில் தென்காசியை பிரமுகர் வெற்றிமாறன் என்பவர் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் இவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் கொடுத்த அழுத்தம் காரணமாக இவரின் மனு ஏற்கப்படவில்லை என்று இவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதனால் மனம் வெறுத்துப் போன வெற்றிமாறன், நேராக சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார். சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் முக ஸ்டாலின் வீடு முன்பாக அவர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
வெற்றிமாறன் சுயேட்சையாக மனு தாக்கல் செய்ததால் வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதாக கூறி கோஷங்களையும் எழுப்பினார். இதனிடையே அலுவல் நிமித்தமாக முதல்வர் முக ஸ்டாலின் அவரது வீட்டிலிருந்து கிளம்ப தயாராகிக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் திடீரென தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொண்ட வெற்றிவேல் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். முதல்வர் புறப்பட 30 நிமிடம் முன் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதை பார்த்ததும் பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் தீயை அணைத்து கீழ்பாக்கம் மருத்துவமனையில் வெற்றி வேலை சிகிச்சைக்கு சேர்த்தனர். வெற்றிவேல் உடலில் 40% தீக்காயம் ஏற்பட்டுள்ளது என்பதால் அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் மா. சுப்பிரமணியம் மருத்துவமனை செல்கிறார்.
தி.நகர் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். தேனாம்பேட்டை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் வீட்டுக்கு முன்பாக, ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.