தான் இயக்கிய ஆன்டி இன்டியன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்றுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
சினிமா விமர்சனத்தில் ‘வசை’ என்ற புதிய போக்கை அறிமுகப்படுத்தியவர் தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனலை நடத்தி வரும் மாறன். எப்போதும் நீலநிற சட்டை அணிந்து கேமராவில் தோன்றுவதால் ப்ளூ சட்டை மாறன் என்ற பெயர் அவருக்கு நிலைத்தது. இவர் இயக்கியிருக்கும் முதல் படம் ஆன்டி இன்டியன். படத்தின் போஸ்டரில் குரங்கு ஒன்று கழுத்தில் காவித்துண்டுடன் இருக்கும் படம் இடம்பெற்றிருந்தது.
அத்துடன் மாறனின் படத்தைப் போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றும் அதில் இடம்பெற்றிருந்தது. இப்படி படப்பெயர், போஸ்டர் என அனைத்திலும் கான்ட்ரவர்ஸியை கொண்டிருந்த ஆன்டி இன்டியனுக்கு சான்றிதழ் தர முடியாது என ஏப்ரல் 5-ஆம் தேதி மத்திய தணிக்கைக்குழு வாரியம் கூறியது. மறுதணிக்கைக்கு படத்தை அனுப்பியதில், சான்றிதழ் தரலாம், ஆனால் 36 இடங்களில் கத்திரி போட வேண்டும் என்றனர். இதனால், நீதிமன்றத்தை நாடினார் மாறன்.
தற்போது அவருக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. ‘தடைகளைத் தாண்டி’ என்ற வாசகங்களுடன் சான்றிதழ் காப்பியை பேனரில் வைத்து, படத்துக்கான புரமோஷனை இன்றே தொடங்கிவிட்டார் மாறன்.
படம் வெளியாகும் போது நிச்சயம் பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.