பிரதமர் மோடி குறித்து அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் செய்தி வெளியானதாக பகிரப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் போட்டோஷாப் செய்யப்பட்ட போலி செய்திகள் என தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு பெருநிறுவனத்தலைவர்கள், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார். தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி மோடியின் அமெரிக்க வருகையையொட்டி அமெரிக்காவின் பிரபல நாளேடான நியூயார்க் டைம்ஸ் நாளேட்டின் முதல் பக்கத்தில் ‘பூமியின் கடைசி, சிறந்த நம்பிக்கை: உலகில் அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும், மிகவும் சக்தி வாய்ந்த தலைவர், நம்மை ஆசிர்வதிப்பதற்காக இங்கே வந்திறங்கினார்” என செய்தி வெளியிட்டதாக கூறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. அதேபோல, “மீட்பர் வந்தார்: உலகில் அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும், மிகவும் சக்தி வாய்ந்த தலைவர் அமெரிக்காவில் வந்திறங்கினார் என நியூயார்க் டைம்ஸ்சின் முதல் பக்கத்தில் செய்தி வெளியானதாக இரண்டாவதாக ஒரு புகைப்படமும் வெளியாகியது.
இந்நிலையில் இவை போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்கள் என தற்போது தெரியவந்துள்ளது. மோடி அமெரிக்கா சென்ற நாளில் நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் என்ன செய்தி வெளியாகியிருக்கிறது என அந்நாளேட்டின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று தேடியபோது முதல் பக்கத்தில் மோடி குறித்த எந்த செய்தியும் வெளியாகவில்லை, வேறொரு செய்திதான் வெளியாகியிருக்கிறது.
Those sad creatures called bhakts are sharing front page from the @nytimes dated 9 November 2016 claiming Modi has been hailed as the worlds most powerful leader (on wet dreams) But when they photo shopped the picture they forgot to run a spellcheck on the word messiah!
LOL pic.twitter.com/CPtOrpmG8n— JayKay (@JayKay074) September 25, 2021
மோடியின் செய்தி குறித்து வெளியான இரு புகைப்படங்களிலும் எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. மாதம் மற்றும் தேதியிட்ட அந்த செய்தியில் SEPTEMBER என்பதற்கு பதிலாக SETPEMBER என எழுதப்பட்டிருக்கிறது.
மீட்பர் வந்தார் Messiah Arrives என்பதற்கு பதிலாக ஆங்கிலத்தில் எழுத்துப் பிழைகளோடு Messaih என எழுதப்பட்டிருக்கிறது. மற்றும் இன்னொரு புகைப்படத்தில் நவம்பர் 9, 2016 என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேதி கூட மாற்றாமல் போட்டோஷாப் செய்திருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் புகைப்படங்களில் இருந்த ஃபாண்டும் font நியூயார்க் டைம்ஸ்சின் ஃபாண்ட் கிடையாது.
இந்நிலையில் போலியான செய்தியில் வெளியான புகைப்படத்தைக் குறித்து தேடியபோது
அது ஏற்கெனவே முன்பொருநாளில் மோடியின் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டிருந்ததும் தெரியவந்தது.